Sunday 2 March 2014

''ப்பா...'' இப்போதான் சினிமாவைப் புரிஞ்சுக்கிறேன்..!

''ப்பா...'' - இந்த இரண்டெழுத்து வசனம் மூலம் பிரபலமானவர் காயத்ரி. இது கடலை வித் காயத்ரி...

''உங்க சினிமா பிரவேசம் பற்றிச் சொல்லுங்க''

''ப்ளஸ் டூ படிச்சுட்டு இருக்கும்போது 'சில்லுனு ஒரு காதல்’ படத்தோட டைரக்டர் கிருஷ்ணா சாரை மீட் பண்ணினேன். 'ஏன் இப்படி மயக்கினாய்?’னு அவருடைய அடுத்த படத்துக்கான நாயகியைத் தேடிட்டு இருந்தவருக்கு, என் முகம் பிடிச்சிருந்தது... நடிச்சேன். அந்தப் படத்தோட இசை வெளியீட்டு விழா நடந்தும் படம் மட்டும் ரிலீஸ் ஆகவே இல்லை. அடுத்து கிடைச்ச வாய்ப்புதான் '18 வயசு’.''

''கொஞ்ச நேரம் வந்துபோகிற கேரக்டர்லேயே பெரும்பாலும் நடிச்சிருக்கீங்க... காரணம்?''

'''நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துல 10 நிமிஷம்தான் வருவேன். ஆனாலும் ஆடியன்ஸ் மனசுல கச்சிதமா நிக்கிறேனே? அதுபோதும். ஏன்னா, நல்ல கதை இருந்தா மட்டுமே படம் பார்க்க வருவாங்க. மொக்கையான கதையில் முழுசா வர்றதைவிட, நல்ல கதையில் நாலு நிமிஷம் வந்தா போதும்... என்ன நான் சொல்றது?''


''அடுத்தடுத்து விஜய் சேதுபதியோடவே ஜோடியா நடிக்கிறதுக்கு ஸ்பெஷல் காரணம் ஏதாவது....?''

''விஜய் சேதுபதியை நான் முதல் முதல்ல பார்த்ததே 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஷூட்டிங்லதான். டைரக்டர் பாலாஜி கொடுத்த வாய்ப்பு அது. அடுத்து 'ரம்மி’யில் நடிச்சேன். இது அந்தப் படத்தோட கேமராமேன் மூலமா கிடைச்ச வாய்ப்பு. இப்போ நடிக்கிற 'மெல்லிசை’ படத்தோட இயக்குநர், அவருடைய முதல் படத்துக்கே என்னைத்தான் ஹீரோயினா செலக்ட் பண்ணினார். 

சில காரணங்களால் அந்தப் படம் நின்னுபோக, 'மெல்லிசை’க்கு என்னை ஹீரோயின் ஆக்கிட்டார். இப்படித்தான் எனக்கு எல்லா வாய்ப்புகளும் கிடைச்சது. ஆனா, விஜய் சேதுபதிதான் எனக்கு சான்ஸ் வாங்கிக் கொடுக்கிறதா எழுதுகிற கிசுகிசுகளுக்குப் பதில் சொல்ல விரும்பலை. விஜய் சேதுபதி, தன்னுடன் நடிக்கிற யார் நடிப்புப் பிடிச்சிருந்தாலும் ரொம்பவே என்கரேஜ் பண்ணுவார். அவ்வளவுதான்.''

''சூர்யா மட்டும்தான் உங்களுக்குப் பிடிச்ச நடிகராமே?''

''இந்தத் தகவலை விக்கிபீடியாவுல யாரு எழுதினதுனுதாங்க நான் தேடிட்டு இருக்கேன். விஜய், அஜித், சூர்யா, மாதவன்னு என் ஃபேவரைட் ஸ்டார்ஸோட லிஸ்ட் ரொம்ப நீளம்.''

''உங்க மேக்கப்பைப் பார்த்து 'ப்பா... யார்றா இந்தப் பொண்ணு? பேய் மாதிரி இருக்கா?’னு நேர்ல யாராவது கேட்டிருக்காங்களா?''

''ஏன் இப்படி? நான் அதிகமா மேக்கப் போடவே மாட்டேன். ஆனாலும் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துல அந்த சீன்ல நடிச்சதுக்கு அப்புறம் ரொம்ப கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்களோனு பயம் வந்துடுச்சு. அந்தப் படத்தோட பிரஸ்மீட்டுக்குப் போகும்போதுகூட சுத்தமா மேக்கப் இல்லாமதான் போனேன். இப்போ யாராவது கலாய்ச்சாக்கூட, 'படத்தோட டயலாக்தான் பேசுறாங்க... நம்ம மேக்கப்பைக் கலாய்க்கலை’னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்.''

''நடிகை ஆவதற்கு முன்... ஆனதற்குப் பின்... குறிப்பு''

'' வீட்டுக்கு ஒரே பொண்ணு. அப்பா, அம்மா, பெரியம்மானு எல்லோருக்குமே நான் செல்லம். ஆரம்பத்தில் சினிமாவும் அப்படித்தான். நடிகையா நடிச்ச முதல் படம் ரிலீஸ் ஆகலைனாலும் அந்தப் படத்துல எனக்கு கிடைச்சதெல்லாமே 'ஸ்வீட் மெமரீஸ்’ மட்டுமே. 'சூர்யாவை இயக்கியவர் நம்மை நடிகை ஆக்குறாருனா, நம்ம ரேஞ்சே வேற’னு சின்னப்புள்ளத்தனமா யோசிச்சுட்டு, 'இனிமே பெரிய நடிகர்களோட படங்கள்ல மட்டும்தான் நடிப்பேன்’னு பிரஸ்மீட் வைக்கணும்னு எல்லாம் பிளான் பண்ணிட்டேன். ஆனா, முழுக்க சினிமாவில் வந்ததுக்கு அப்புறம்தான் 'எதிர்பார்த்தது எல்லாமே இங்கே நடக்காது’னு தெரிஞ்சது. என்னென்ன நினைச்சுக்கிட்டு வந்தேனோ, அதெல்லாம் உடைஞ்சுக்கிட்டே வந்துச்சு. சிம்பிளா சொல்லணும்னா, 'சினிமாவில் நடக்கிற எதையுமே முன்னாடியே பிளான் பண்ண முடியாது’னு தெரிஞ்சுக்கிட்டேன்.''

''படிக்கிற வயசுல பசங்க ஏகப்பட்ட 'ஐ லவ் யூ’ சொல்லியிருப்பாங்களே?''


''அதெல்லாம் கிராஸ் பண்ணாம வர முடியுமா? ஒருத்தன் என்கிட்ட வந்து 'ஐ லவ் யூ’ சொல்லிட்டு, 'நாலு மணிக்கு நான் பாலத்துல நிற்பேன்... நீ வந்து, என்னைப் பார்த்து ஒகே சொல்லலைனா, குதிச்சு செத்துடுவேன்’னு சொல்லிட்டுப் போனான். நானும் அவன் சொன்ன டைமை விட கொஞ்சம் லேட்டா போய் 'மணி 4.30 ஆகிடுச்சு... இன்னும் குதிக்கலையா? நீ குதிக்கிறதைப் பார்க்கிறதுக்குதான் நான் வந்தேன்’னு சொல்லிட்டுக் கௌம்பிட்டேன். என்ன பண்றதுனு தெரியாம அவனே திரும்பிப் போயிட்டான்.  எந்த பதில் கிடைச்சாலும் பரவாயில்லைனு தைரியமா வந்து, 'எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?’னு கேட்கிறவங்களைத்தான் எனக்குப் பிடிக்கும். அதே சமயம், 'எனக்கு உன்னைப் பிடிக்கலை’னு சொன்னாலும் அதைப் புரிஞ்சுக்கிட்டுத் திரும்பிப் போயிடணும்.''

0 comments:

Post a Comment