Sunday 2 March 2014

வாகன(கார்) கடன் பெற வேண்டுமா..? இதப்படிங்க...!



இன்றைய நிலையில் சொந்த வாகன வசதி என்பது அத்தியாவசியமாகி விட்டது. அதிலும், மத்திய இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து கார்களின் விலை குறைந்துள்ளதால், பலருக்கும் கார் வாங்கும் ஆசை எழுந்திருக்கிறது.

குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் வெளியிடங்களுக்குச் சென்றுவர கஷ்டமாக இருக்கிறது, கார் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. கார் கனவை நிறைவேற்ற வங்கிகள் கடன் கொடுக்கின்றன. 'கார் வாங்கலியோ... கார்!' என்று கூவாத குறையாக கார் கடன் பெற அழைக்கிறார்கள்.

அதெல்லாம் சரி, ஆனால் கார் கடன் பெறுவதற்கு நமக்கு என்ன தகுதி வேண்டும் என்கிறீர்களா? இதோ விவரம்... கார் கடன் பெற விண்ணப்பிக்கும் நபருக்கு குறைந்தபட்சம் 21 வயதாகி இருக்க வேண்டும். பொதுவாக, கடன் முடியும்போது மாதச் சம்பளக்காரர்களுக்கு 60 வயதும், சுயதொழில் செய்பவர்களுக்கு 65 வயதும் இருப்பதுபோல் இருந்தால் தான் கடன் கிடைக்கும்.

குறிப்பிட்ட நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்து வர வேண்டும். பொதுவாக, மாதச் சம்பளக்காரர் எனில், தற்போதைய பணியில் குறைந்தபட்சம் ஓராண்டும், மொத்தத்தில் வேலைக்கு வந்து இரண்டு ஆண்டுகளும் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.

இது பொதுவான விதிமுறை. சில தனியார் வங்கிகளில் கார் கடன் பெற, தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். வேலைக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். மாதந்தோறும் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகை, ரூ.7,500 + கார் கடனுக்கான மாதத் தவணையாக இருந்தால் மட்டுமே கடன் கிடைக்கும்.

உதாரணமாக, ஒருவர் மாதாந்திரத் தவணையாக (ஈ.எம்.ஐ.) ரூ. 5,000 கட்ட வேண்டும் என்றால், அவருடைய சம்பளத்தில் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தொகை ரூ. 12,500 ஆக இருக்க வேண்டும். கடன் வாங்குபவரின் ஆண்டுச் சம்பளம் குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருப்பது அவசியம்.

சுயதொழில் செய்பவர் எனில், ஆண்டு நிகர லாபம் குறைந்த பட்சம் 60 ஆயிரம் ரூபாய் (சிறிய காருக்கான கடன்), ஒரு லட்சம் ரூபாயாக (நடுத்தர மற்றும் சொகுசு கார் கடன்) இருக்க வேண்டும். சில நிறுவனங்கள், வீட்டில் அவசியம் தரைவழி தொலைபேசி இணைப்பு (லேண்ட் லைன்) இருக்க வேண்டும் என்பார்கள்.

கார் கடன் பெறுவதற்கு வருமானத்தை உயர்த்திக் காட்ட, கடன் வாங்குபவரின் சம்பளத்தோடு மனைவியின் வருமானத்தையும் சேர்த்துக் காட்டி, கூடுதல் தொகையைக் கடனாகப் பெற முடியும். பணிபுரியும் இடத்துக்கான சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால், சில நாட்களிலேயே கார் கடன் பெற்றுவிடலாம்.

வங்கியில் இக்கடனுக்கான பிரிவினர் துரிதமாகச் செயல்பட்டு கடனுக்கு ஆவன செய்துவிடுவார்கள். கார் வாங்குவது சரி, அதற்கு தொடர்ந்து பெட்ரோல், டீசல் போட்டுக் கட்டுப்படியாகுமா, பராமரிப்புச் செலவைச் சமாளிக்க முடியுமா, நகர்ப்புறம் என்றால், வீட்டில் வாகன நிறுத்த வசதி இருக்கிறதா என்றெல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு கார் கடனை நாடுங்கள்! 

0 comments:

Post a Comment