Sunday 2 March 2014

சாரதாவை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சிவாஜிகணேசன்...!



சிறந்த நடிகைக்கான தேசிய விருதை (ஊர்வசி பட்டம்) மூன்று முறை பெற்றவர் நடிகை சாரதா.

இவரை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், சிவாஜிகணேசன். சாரதாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் தெனாலி ஆகும். தந்தை வெங்கடேசலு. தாயார் சத்தியவதிதேவி. சாரதா ஆந்திராவில் பிறந்தாலும், வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆந்திராவில் 8 ஆம் வகுப்பு வரை படித்தார்.

சாரதா சிறுமியாக இருந்தபோதே பரதநாட்டியம் கற்றுக்கொண்டார். 1956 ஆம் ஆண்டு என். டி. ராமராவ் நடித்த ‘கன்னியாசுலகம்’ என்ற படத்தில் சிறுமி வேடத்தில் நடித்தார். அதன் பின்னர் ‘ரத்தக்கண்ணீர்’ என்ற தெலுங்கு நாடகத்தில் நடித்தார்.

தனது 14 வது வயதில் 100 க்கும் மேற்பட்ட நாடகங்களில் கதாநாயகியாக நடித்தார். 1961 ஆம் ஆண்டு நடிகர் நாகேஸ்வரராவின் சொந்த படக் கம்பெனியான அன்னபூர்ணா பிக்சர்ஸ் மூலம் ‘இத்தரு பித்ருலு’ (இரு நண்பர்கள்) படத்தில் தங்கை வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்தார்.

இது பற்றி சாரதா கூறியதாவது :-

‘எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கலைத்துறையில் ஈடுபாடு இல்லை. சங்கீதம், நாட்டியம் ஆகியவற்றை எனக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் என் தாயாருக்கு இருந்ததால், 6 வயதில் பரத நாட்டியம் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 13 வயதில் நாடகத்தில் எப்போதாவது ஒரு முறை நடித்து வந்தேன்.

சென்னைக்கு வந்தபின், படங்களில் சிறுமி வேடத்தில் நடிக்க ஆரம்பித்தேன். ஒரு முறை ‘அனார்கலி’ என்ற படத்தில் அஞ்சலிதேவி நடித்துக்கொண்டு இருந்தபோது அவரை சந்தித்தேன். தன் தலையில் இருந்த கிரீடத்தை, என் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தார் சிறந்த நடிகராக வர வேண்டும் என்று வாழ்த்தினார்.

என் தாயாரின் முயற்சியால்தான் நான் கலைத்துறைக்கு வந்தேன். இல்லையென்றால் கலைத்துறைக்கு வந்து இருக்க முடியாது. எல். வி. பிரசாத், புதுமுகங்களுக்கு பயிற்சி கொடுத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்.

நானும் அங்கு சினிமாவில் நடிக்க பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு நாகேஸ்வரராவ் படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.’இவ்வாறு சாரதா கூறினார்.

இந்த நிலையில் ‘திப்பதி’ என்ற தெலுங்கு நாடகத்தில் நடிகை சாரதா நடித்து வந்தார். ஒரு நாள் அந்த நாடகத்திற்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தலைமை தாங்கினார்.
நாடகத்தில் சாரதாவின் நடிப்பு அற்புதமாக இருந்ததை, சிவாஜி கவனித்தார். நாடகத்தில் மிகவும் சிறப்பாக நடித்த சாரதாவை, தமிழ்ப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று சிவாஜி முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ‘குங்குமம்’ என்ற படத்தில் சாரதா இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகை விஜயகுமாரியும் நடித்தார்.

கிருஷ்ணன் பஞ்சு டைரக்டர் செய்தனர். அதனைத் தொடர்ந்து ‘துளசிமாடம்’, ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ போன்ற படங்களில் சாரதா நடித்தார். 1972 ஆம் ஆண்டில் மாதவன் இயக்கத்தில் ‘ஞானஒளி’ படத்திலும் 1978 ஆம் ஆண்டு ராமண்ணா டைரக்ஷனில் ‘என்னைப்போல் ஒருவன்’ படத்திலும், சிவாஜியுடன் சாரதா மிகவும் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.

சிவாஜியுடன் நடித்தது பற்றி சாரதா கூறியதாவது :-

‘திருப்பதி நாடகத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த போது, அந்த நாடகத்திற்கு சிவாஜி தலைமை தாங்க வந்தார். நாடகத்தில் எனது நடிப்பை பார்த்து ‘குங்குமம்’ படத்திற்கு தயாரிப்பாளரிடம் கூறி, எனக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தார்.

அப்போது எனக்கு கெரக்டர் நடிப்பை சொல்லிக் கொடுத்தார். எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜியிடம் கற்றேன். ‘குங்குமம்’ படத்தில் அவருடன் முதன் முதலில் நடிக்க செல்வதற்கு முன்பு ரொம்பவும் பயந்தேன்.

அதற்கு சிவாஜி, ‘நான் என்ன புலியா, சிங்கமா? நானும் மனிதன்தானே! எதற்காக பயப்படுகிறாய்!’ என்றார். அதன் பிறகுதான், எனக்கு பயம் போய் தைரியம் வந்தது நடிப்பில் ஆர்வம், இருப்பவர்களுக்கு சிவாஜி நடிப்புச் சொல்லி தருவார்.

ஆர்வம் இல்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டார்! நடிப்பதற்கு முன்பு ‘இந்த கெமரா கோணத்தில் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று சொல்லித் தருவார்’ இவ்வாறு நடிகை சாரதா கூறினார்.

0 comments:

Post a Comment