Sunday 2 March 2014

'பிரம்மன்’ படத்துக் கதையைச் சொல்றேன். கவனமாக் கேளுங்க..!

''நீங்க, உங்களோடு சில நண்பர்கள், நட்புக்காகத் தியாகங்கள் பண்றீங்க...'' - இப்படிக் கதை சொன்னாலே சசிகுமார் ஓகே சொல்லிவிடுவார். அவருக்கு ஓகே. நமக்கு? 'பிரம்மன்’ படத்துக் கதையைச் சொல்றேன். கவனமாக் கேளுங்க!
 கோவையில் 'மாடர்ன் தியேட்டர்’னு ஒரு பாடாவதி தியேட்டரை லீஸுக்கு எடுத்துப் படம் ஓட்டுகிறார் சசிகுமார். அவருக்கு ஒரு நண்பன் இருக்கணுமே. 'நண்பேன்டா’ சந்தானம். ஓட்டுவது எல்லாம் செகண்ட் ரிலீஸ் படங்கள் என்பதால் கூட்டமே வருவது இல்லை. எல்லாப் படங்களையும் போல அப்பா ஞானசம்பந்தன் 'உதாவக்கரை’ என்று மகனைத் திட்டுகிறார். தியேட்டருக்கு கமர்ஷியல் டாக்ஸ் கட்டாததால் கெடு விதித்து, நோட்டீஸும் ஒட்டுகிறார்கள். 

ஒரு கட்டத்தில் காதலியை மணக்க வேண்டும் என்றால், இந்தப் பாடாவதி தியேட்டரைத் தலைமுழுகிவிட்டு வேறு ஏதாவது உருப்படியான வேலை பார்க்க வேண்டும் என்ற நிர்பந்தம். ஆனாலும் தியேட்டரைக் கைவிட மறுக்கிறார் சசிகுமார். உருப்படவே மாட்டேன் என்று அவர் தலைகீழாய்த் தண்ணி குடிக்கிறார். ஏன்? இங்கே தொடங்குது ட்விஸ்ட். அதுக்கப்புறம் படத்தோட இரண்டாம் பாதி முழுக்க ட்விஸ்ட்டோ ட்விஸ்ட்டுகள்.

முதல் ட்விஸ்ட் சந்தானத்தைப் போலவே சின்ன வயதில் சசிகுமாருக்கு இன்னொரு நண்பன் இருக்கிறார். இரண்டு பேருக்கும் அப்படி ஒரு சினிமா தாகம். கீழே கிடக்கும் ஃபிலிம் துண்டுகளை எடுத்து, அவர்களே படம் ஓட்டிப் பார்க்கிறார்கள். ஸ்கூலை கட் அடித்துவிட்டுப் படம் பார்த்து வீட்டில் மாட்டுகிறார்கள். சசிகுமாரின் நண்பன் மதன்குமாரின் கலை தாகத்தைப் புரிந்துகொண்ட அவரது அப்பா, ''சசிகுமாரிடம் பேசக் கூடாது'' என்று சத்தியம் வாங்கிவிட்டுச் சொல்கிறார், ''நீ இந்த ஊரில் இருந்தா டைரக்டர் ஆக முடியாது. டவுன் ஸ்கூலில் படிச்சாதான் டைரக்டர் ஆக முடியும்'' என்று. (அதுக்குள்ளே முறைச்சா எப்படி?). அதேபோல் வளர்ந்து தெலுங்கில் மூணு ஹிட் கொடுத்து பெரிய டைரக்டர் ஆகிவிடுகிறார் நண்பன் மதன்குமார். ஐந்து லட்சம் கமர்ஷியல் டாக்ஸ் கட்டினால்தான் தியேட்டரை மீட்க முடியும் என்ற நிலையில் சின்ன வயசு ஃப்ளாஷ்பேக் கொசுவத்தியை சந்தானத்திடம் பற்றவைக்கும் சசிகுமார், அதே கொசுவத்தியை நண்பன் மதன்குமாரிடம் பற்றவைத்து ஐந்து லட்சம் வாங்கி வர, சென்னைக்கு பஸ் ஏறுகிறார்.

சென்னையில் டைரக்டர் மதன்குமாரின் அட்ரஸை சூரியிடம் விசாரித்துத் தப்பாக தயாரிப்பாளர் ஜெயப்பிரகாஷைச் சந்திக்கிறார். அங்கே புதிய இயக்குநர்களிடம் கதை கேட்கும் ஜெயப்பிரகாஷ், சசிகுமார், மதன்குமாரின் அசிஸ்டென்ட் என்று அவராகவே நினைத்து, சசி சொன்ன நட்புக் கதையையும் சினிமாக் கதை என்று நினைத்து ஐந்து லட்சம் அட்வான்ஸ் கொடுத்து (அதே ஐந்து லட்சம்) ''இந்தக் கதையைப் படமாப் பண்ணிடுங்க'' என்கிறார். உள்ளே உண்மையைச் சொல்லாமல், வெளியே வந்து ஃபீல் ஆகும் சசிகுமாரிடம், ''கவலைப்படாதே''னு சொல்லி, சினிமாவைக் கற்றுக்கொள்ள சில படங்களில் அசிஸ்டென்ட் டைரக்டராகச் சேர்த்துவிடுகிறார் சூரி. ஒரே நேரத்தில் டைரக்டர், அசிஸ்டென்ட் டைரக்டர் என்று சவாரி செய்யும் சசிகுமாரைச் சந்தித்தேவிடுகிறார் நண்பன் டைரக்டர்.


''ஏன் என் அசிஸ்டென்ட்னு பொய் சொன்னே?'' என்று கேட்பவரிடம், ''நான் உங்க ரசிகன்'' என்று சமாளிக்கிறார் சசிகுமார். ''உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே?'' என்று சூரி கேட்க, ''நண்பனாத் தேடி வரும்போதுதான் உண்மை சொல்லணும்'' என்று தத்துவம் நம்பர் 2001-ஐ உதிர்க்கிறார் சசி. ஆனால் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளருக்கே உண்மை தெரிய, ''உங்க கதையைப் படமா எடுத்தா கண்டிப்பா 100 நாள் ஓடும். (நோ, நோ அப்படில்லாம் முறைக்கக் கூடாது). ஆனா சினிமா அனுபவம் இல்லாததால் கதையை என்கிட்ட வித்துக் காசு வாங்கிக்குங்க'' என்று ஜெயப்பிரகாஷ் சொல்ல மறுக்கிறார் சசிகுமார். அதுக்கப்புறம் நண்பன் டைரக்டரே சசிகுமாரைச் சந்தித்து, ''தமிழில் முதல் படம் பண்ணப்போறேன். என்கிட்ட கதை இல்லை'' என்று கேட்கிறார். (எங்க 'ஜெயம்’ ராஜாவெல்லாம் கைவசம் கதையே இல்லைன்னாலும் தெலுங்குப் படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுப்பாப்ல. தெலுங்குல மூணு ஹிட் கொடுத்த மதன்குமாருக்கு கதைப் பஞ்சம். ஹூம்)

 ''நீங்க கேட்டாக் கட்டை விரலையே காணிக்கையாத் தருவேன். கதையைத் தர மாட்டேனா?'' என்று தத்துவம் நம்பர் 3001-ஐ உதிர்த்துவிட்டு, தயாரிப்பாளரிடம் காசும் வாங்க மறுத்து, மீண்டும் கோயம்புத்தூருக்கே வருகிறார் சசிகுமார்.

அங்கே வந்து பார்த்தால், சசிகுமார் கோயிலா நினைச்சுக்கிட்டிருந்த தியேட்டரில் வளைச்சு வளைச்சு பிட்டுப் படங்கள் ஓட்டுகிறார் சந்தானம். ஏற்கெனவே தயாரிப்பாளரிடம் வாங்கிய ஐந்து லட்சத்தை ஊருக்கு அனுப்பியும் ஏன் சந்தானம் கஜகஜா படம் ஓட்டுகிறார்? அதுக்கும் ஒரு காரணம் இருக்குல்ல? சசிகுமார் டைரக்டர் ஆகிவிட்டார் என்பதைக் கேள்விப்பட்டு ஞானசம்பந்தனுக்கு சந்தோஷத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாம். 

இவ்வளவு ட்விஸ்ட் வெச்சா, வராம என்னங்க பண்ணும்?) ஞானசம்பந்தனுக்கு சிகிச்சை பார்த்ததில் ஐந்து லட்சம் அவுட் ஆக, அப்புறம் என்ன, ஷகிலாதான், சல்சா படம்தான். டயர்ட் ஆகாதீங்க பாஸ், இன்னொரு முக்கியமான ட்விஸ்ட். சசிகுமாரின் காதல் பெண்ணுக்கும் நண்பன் டைரக்டருக்கும் திருமணம் வேறு நிச்சயமாகிவிடுகிறது. தியாகி பென்ஷன் வாங்காமலே நட்புக்காகப் பல தியாகங்களைச் செய்யும் சசிகுமார் இதையும் ஏற்றுக்கொள்கிறார். திடீரென்று கமர்ஷியல் டாக்ஸ் அலுவலகத்தில் இருந்து சசிகுமாருக்கு அழைப்பு. ''நீங்க மக்களுக்குச் செஞ்ச சேவையைப் பாராட்டி அரசாங்கமே டாக்ஸைத் தள்ளுபடி செஞ்சுடுச்சு'' என்கிறார் அதிகாரி. (நல்லாக் கவனிங்க மக்களே! தியேட்டரை மூடுறதுக்கு முன்னால ஓடினது எல்லாமே பிட்டுப் படங்கள்...சேவை!)

அப்புறம் என்ன, தியேட்டரின் நூலாம்படையை எல்லாம் நீக்கிவிட்டு, யாருமே வராத தியேட்டரில் தனியாகப் படம் ஓட்டி ஃபீல் ஆகிறார் சசிகுமார். அதே நேரம் நண்பன் டைரக்டருக்கும் காதலிக்கும் திருமண ரிசப்ஷன். அப்புறம் உண்மை தெரிஞ்ச டைரக்டர் சசிகுமாரைப் பார்க்க வந்து...  
ஹலோ பாஸ், ஏன் படிச்சிட்டிருக்கும்போதே பாதியில் எந்திரிச்சு தம் அடிக்கப் போயிட்டீங்க? நாங்கல்லாம் பாவம் இல்லையா? 'அப்போ படத்தில் வித்தியாசமே இல்லையா?’ங்கிறீங்களா? ஏங்க இல்லை? இதுநாள் வரைக்கும் கரட்டுமேட்டில் கைலியோட சுத்திட்டிருந்த சசிகுமார் முதன்முறையா ஃபாரீன் டூயட்டெல்லாம் ஆடறாரே! மறுபடி மறுபடி முறைக்காதீங்க பாஸ். ஏற்கெனவே நொந்துபோயிருக்கோம்.

ஆனா ஒண்ணுங்க, எனக்கெல்லாம் இந்தப் படத்தில் ரெண்டே ரெண்டு கோரிக்கைதாங்க.

கோரிக்கை நம்பர் ஒன் : படத்துக்கு 'பிரம்மன்’னு டைட்டில் வெச்சதுக்குப் பதிலா 'எமன்’னு வெச்சிருக்கலாம். மரண பயத்தைக் காட்டிட்டீங்களேய்யா?
கோரிக்கை நம்பர் டூ : படம் ஒரு வழியாக முடிந்து அப்பாடா என்று எழும் நேரத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் ஒரு பாடல் ஒலிக்கிறது, ''ஓடு ஓடு ஓடு...'' என்று. இதை ஓப்பனிங் சாங்காப் போட்டிருந்தா அப்பவே அப்படியே ஓடியிருப்போமே டி.எஸ்.பி. சார்!


0 comments:

Post a Comment