Sunday 2 March 2014

காலத்தை வென்ற பாடல்களை எழுதிய தஞ்சை ராமையாதாஸ்..!



சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா” பாடலும் தந்தவர். மாயாபஜார் படத்துக்கு “கல்யாண சமையல் சாதம்” பாடலும் தந்தவர்.

காதலை நெஞ்சில் பதிக்கும் “மணாளனே மங்கையின் பாக்கியம்” படப்பாடலான “அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா”வும் தருவார்.
நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் “மலைக்கள்ளன்” படப்பாடலான “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடலும் தந்தவர்.

புரியாத மொழியில் ‘ஜிகினா’ வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் “ஜாலியோ ஜிம்கானா” பாடலை எழுதியதும் இவரே.

கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே” பாடலை போடுவார்கள். “பானை பிடித்தவள் பாக்கியசாலி” படத்துக்காக இந்தப் பாடலை எழுதியதும் இவர்தான்.

இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.

1939 இல் வெளிவந்த “மாரியம்மன்” படத்தில் இவர் எழுதிய பாடல்தான் சினிமா உலகுக்கு இவரை கவிஞராக அறிமுகம் செய்தது. தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் எழுதியவர். எழுதிய பாடல்கள் இரண்டாயிரத்துக்கும் மேல்.

தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி சொந்த ஊர். அங்குள்ள சென்ஸ் பீட்டர் மேல் நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர். தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து “புலவர்” பட்டம் பெற்றார். அதோடு ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.

பள்ளி ஆசிரியராக இருந்தவர், சினிமாவுக்கு பாட்டெழுத வந்தது எப்படி?
கவிஞரின் மகன் ரவீந்திரன் இதற்கு பதில் சொல்கிறார்:

அப்பாவுக்கு அப்போதே பாட்டெழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அப்போது தஞ்சை சரஸ்வதி மகாலில் அடிக்கடி புலவர்கள் கூடி பாடல்கள் பற்றி விவாதிப்பது வழக்கம். இதில் ராஜாவின் அரண்மனைப் புலவர்களாக இருந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சபையில் நடந்த பாட்டுப்போட்டியில் அரண்மனைப் புலவர்களும் ஆச்சரியப்படும் விதத்தில் அப்பா முதல் பரிசான தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
சுதந்திரம் கிடைத்த பிறகு “சுதந்திர போராட்ட தியாகி” என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆசிரியப் பணியை தொடரும் போதே நாடகத் துறையிலும் நாட்டம் ஏற்பட, ஒரு நாடகக்குழு அவரை தன் சபாவில் வாத்தியாராக ஏற்றுக்கொண்டது. நாடக கதை - வசன - பாடலாசிரியருக்கு ‘வாத்தியார்’ என்ற பெயர் நிலைத்து விடும். இந்த வகையில் நாடகத் துறையிலும் ‘வாத்தியார்’ ஆனார். மச்சரேகை, பகடை, பவளக்கொடி, விதியின் வெற்றி, அல்லி அர்ஜுனா, வள்ளி திருமணம் போன்ற நாடங்களையும் நடத்தி வந்தார்.

ஊர் ஊராக நாடகம் போட்டு வந்த அப்பாவை ராமசாமி பாவலர் என்பவர் சேலத்தில் நாடகம் போட அழைத்து வந்தார். அதே ஊரில் அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி”, “ஓர் இரவு” போன்ற நாடகங்களை கே.ஆர். ராமசாமி நடத்தி வந்தார். இரண்டு குழு நாடகங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. அப்பாவின் வசனமும் பாடல்களும் நாடக மேடையில் பிரபலம் என்பதால் அவரது புகழ் சினிமாத்துறையிலும் பரவ ஆரம்பித்தது.

இதனால் அப்பாவுக்கு சினிமாவில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. இவரை சிறந்த கவிஞராக கண்டுகொண்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அப்போது தயாரித்து வந்த “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தது. அப்பா அந்தப் படத்துக்காக “வெச்சேன்னா வெச்சதுதான்” என்று ஒரு பாடலை எழுதிக்கொடுக்க அது அவர்களுக்கு பிடித்துப்போனது.
அப்பாவை நாடகம் மூலமாக ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த நடிகர் டி.ஆர். மகாலிங்கம், அப்பாவை மொடர்ன் தியேட்டர்சில் கவிஞராக பார்த்த போது வியந்திருக்கிறார்.

0 comments:

Post a Comment