Sunday 2 March 2014

தமிழ்த் திரையில் சாதனைப் பெண்கள் முதல் இயக்குநர் டி.பி.ராஜலட்சுமி..!



ஆண்களே ஆதிக்கம் செலுத்திய திரையுலகில் ஒரு பெண் இயக்குனராக வெற்றி பெறுவதென்பது இப்போதும் கூட சாதனைதான். எனில் அன்றைய காலகட்டத்தில் ஒரு பெண், திரைப்படத்தை இயக்குவது என்பது ஆண்கள் அனைவரும் மூக்கின்மேல் விரலை வைக்கும் செயல். அந்த செயலை செய்தவர் டி.பி. ராஜலட்சுமி.

இவர் தஞ்சை மாவட்டம் திருவையாற்றைச் சேர்ந்தவர். இசையும் நடனமும் பயின்ற அவர், நாடகக்காவலர் சங்கரதாஸ் சுவாமிகள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்து பெயர் பெற்றார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க அவர் முடிவெடுத்ததும், ஆச்சாரமான அவரது குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்ப, ராஜலட்சுமியை விவாகரத்து செய்தார் அவரது கணவர்.

மெளனப் படங்களை இயக்கிய ராஜாசாண்டோவின் இயக்கத்தில் உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களில் ராஜலட்சுமி நடித்தார். தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் (1931) படத்தில் நடித்த பெருமை ராஜலட்சுமிக்கு உண்டு. எல்லீஸ் ஆர்டங்கன் இயக்கத்தில் சீமந்திரி, கே. சுப்ரமணியம் இயக்கத்தில் பக்த குசேலா, டி.ஆர். ரகுநாத் இயக்கத்தில் பரஞ்ஜோதி எனத் தொடர்ந்து 20 படங்களுக்கு மேல் நடித்தார்.

தனது 20வது வயதில் டி.வி. சுந்தரத்தை காதல் மறுமணம் செய்தார் ராஜலட்சுமி. மல்லிகா என்ற ஆதரவற்ற பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்த அந்த இணையருக்கு, அதன்பின் பிறந்த குழந்தையின் பெயர் கமலா. அக்குழந்தை பிறந்த பிறகு 1936 இல் டி.பி.ராஜலட்சுமி இயக்குநரானார். படத்தின் பெயர் மிஸ் கமலா. இப்படம்தான் தமிழில் ஒரு பெண் இயக்குநர் இயக்கிய முதல் படம். அதன்பின் மதுரை வீரன் (எம்.ஜி.ஆர். நடித்தது அல்ல) என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். திரைத்துறையை பெண்களாலும் ‘ஆட்டிவைக்க’ முடியும் என நிரூபித்தவர் டி.பி. ராஜலட்சுமி.

முதல் சகலகலாவல்லி - பானுமதி:

அஷ்டாவதானி எனப் பெயர் பெற்றவர், நடிகை பானுமதி. ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர். அவரது அப்பா வெங்கடாச்சலய்யா கர்நாடக இசை அறிந்த மேடை நாடகக் கலைஞர். அதனால் சிறு வயதிலேயே பானுமதிக்கு பாட்டு, நடிப்பு ஆகியவற்றில் பயிற்சி கிடைத்தது. ‘வரவிக்ரயம்’ என்ற தெலுங்கு படத்தில் 1938 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார் பானுமதி. தமிழ்ப் படங்களிலும் அவருடைய நடிப்பாற்றல் வெளிப்பட்டது. தமிழிலும் தெலுங்கிலும் எடுக்கப்பட்ட ‘தர்மபத்தினி’ என்ற படம் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பானுமதி.
நாகேஸ்வரராவுடன் லைலா மஜ்னு, அறிஞர் அண்ணா வசனத்தில் கலைவாணர் என்.எஸ்.கே. எடுத்த நல்லதம்பி, எம்.கே. ராதாவுடன் அபூர்வ சகோதரர்கள், பி.யு. சின்னப்பாவுடன் ரத்னகுமார் போன்ற படங்களில் நடித்த பானுமதி, 1953 இல் சண்டிராணி என்ற படத்தை இயக்கினார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கதை, கலைஞர் மு. கருணாநிதியின் வசனம், நாயகனாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த மெகாஹிட் படமான மலைக்கள்ளனில் பானுமதிதான் நாயகி.

சிவாஜியுடன் கள்வனின் காதலி படத்தில் முதன் முதலில் ஜோடி சேர்ந்த பானுமதி அதன் பிறகு எம்.ஜி.ஆருடன் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரைவீரன், நாடோடி மன்னன், தாய்க்குப்பின் தாரம், ராஜாதேசிங்கு, கலையரசி, காஞ்சித்தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சிவாஜியுடன் ரங்கோன்ராதா, மக்களைப் பெற்ற மகராசி, அம்பிகாபதி, ராணி லலிதாங்கி, ராஜபக்தி, அறிவாளி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சதாரம், அன்னை உள்ளிட்ட பல படங்களில் அவருடைய நடிப்பு முத்திரை பதித்தது.

பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்த போதும் பானுமதிக்கு படங்களில் தனி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் அளிக்கப்பட்டு வந்தன. தங்களுக்கு ஜோடி பானுமதி என்றால் பெரிய நடிகர்கள் கூட சற்று அச்சத்துடன் சில அடிகள் தள்ளி நின்றே நடிப்பார்கள்.

நடிப்பில் ஹீரோக்களுடன் போட்டிபோட்ட பானுமதி, தனித்துவம் கதாநாயகர்களுடன் சேர்ந்தும் சொந்தக் குரலில் பாடியும் வந்தார். (எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நாயகர்களுக்குப் பாடல் காட்சிகளில் பின்னணிக் குரல்தான்) ‘அழகான பொண்ணு நான்.. அதற்கேற்ற கண்ணு தான்...’ ‘மாசிலா உண்மைக்காதலே....’, ‘ஆஹா நம் ஆசை நிறைவேறுமா....’ ‘ஆசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’ ‘சம்மதமா நான் உங்கள்கூட வர சம்மதமா’.... என அவர் பாடிய பல தமிழ்ப்பாடல்கள் இன்றும் நம் காதுகளுக்கு சுகம் தரும்.

1986 இளையராஜாவின் இசையில் ‘கண்ணுக்கு மை எழுது’ என்ற படத்தில் ‘வாடா மல்லியே நான் சூடா மல்லியே’ என்ற பாடலைப் பானுமதி பாடினார். 1992 இல் ‘செம்பருத்தி’ படத்திலும் இளையராஜா இசையில் ‘செம்பருத்திப் பூவு.. சித்திரத்தைப் போல’ என்ற பாடலை பாடினார் பானுமதி. தெலுங்கில் சில நடிகைகளுக்கும் பானுமதி பின்னணி பாடியுள்ளார்.

படங்களை இயக்கியதுடன் இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் (எடிட்டர்) பானுமதி செயல்பட்டார். அதனால்தான் அவரால் தொடர்ச்சியாக சொந்தப் படங்களைத் தயாரிக்க முடிந்தது. நாயகியாக நடிப்பது குறைந்த பிறகும் தனக்குப் பிடித்த கதைகளை அவர் இயக்கி வந்தார்.

குழந்தைகளுக்காக அவர் இயக்கிய ‘பத்த துருவ மார்க்கண்டேயா’ என்ற படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. கதை எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து தெலுங்கில் (நாலு நேனு) தனிப்புத்தகமே எழுதி அதற்காக தேசிய விருதும் பெற்றவர் பானுமதி. 2003இல் அவருக்கு பத்மபூஷன் விருதை இந்திய அரசு வழங்கியது. தமிழ்த் திரையுலகின் (தென்னகத் திரையுலகின்) சகலகலாவல்லி பானுமதி.

முதல் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி:

தமிழ்த் திரையுலகின் முதல் கனவுக்கன்னி, டி.ஆர்.ராஜகுமாரி. முகப்பொலிவும் பேசும் கண்களும் பல ரசிகர்களின் தூக்கத்தைக்கெடுத்தன. தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயிதான் திரையுலகில் டி.ஆர். ராஜகுமாரி எனப் புகழ்க்கொடி நாட்டியவர். நடனமும் பாட்டும் அறிந்த ராஜகுமாரி அறிமுகமான படம், குமார குலோத்துங்கன்.
1931 இல் வெளியான அப்படம், அப்படியொன்றும் வெற்றிபெறவில்லை. தமிழ்த் திரையுலகம் தனது முதல் கனவுக்கன்னியை அடையாளம் காண மேலும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1941 இல் வெளியானது ‘கச்ச தேவயானி’ கே. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளியான இப்படம் ராஜகுமாரிக்கு பெயரையும் ரசிகர்களுக்கு தங்கள் மனதில் குடியிருக்க ஒரு நடிகையையும் தந்தது.

அடுத்து வந்தது தமிழின் மெகாஹிட்டான ‘ஹரிதாஸ்’, தியாகராஜ பாகவதருடன் டி.ஆர்.ராஜகுமாரி ஜோடி ‘:wsஜி நடித்த இப்படத்தில்தான் ராஜகுமாரியின் முழுப் பரிமாண நடிப்பும் அழகும் வெளியிடப்பட்டன. 1944 இல் வெளியான இப்படம் மூன்று தீபாவளிகளைக் கண்ட பெருவெற்றிப்படம். அதில் இடம் பெற்ற ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாட்டிற்கு பாகவதருடன் ஜோடி சேர்ந்து கலக்கியிருந்தார் டி.ஆர்.ராஜகுமாரி.

அன்றைய முன்னணி நாயகர்களான பி.யு. சின்னப்பா டி.ஆர். மகாலிங்கம் ஆகியோருடன் நடித்த ராஜகுமாரி அடுத்த தலைமுறை நாயகர்களான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகர் திலகம் சிவாஜி ஆகியோருடனும் நடித்தார். கலைஞரின் திரைக்கதை வசனத்திலும் சிவாஜியின் அபார நடிப்பினாலும் உருவான ‘மனோகரா’ படத்தில் வில்லி பாத்திரமான வசந்த சேனையாக நடித்தவர் டி.ஆர். ராஜகுமாரி. எம்.ஜி.ஆருடன் குலேபகாவலி போன்ற படங்களில் நடித்தார்.

காலமாற்றத்தால் புதுபுது நாயகிகள் திரையுலகில் கொடிநாட்டியபோது, டி.ஆர். ராஜகுமாரி தன் சகோதரரும் இயக்குநருமான டி.ஆர். ராமண்ணாவுடன் இணைந்து படத்தயாரிப்பில் ஈடுபட்டார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் என்ற அவர்களது பட நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, 1953 இல் வெளியான வாழப்பிறந்தவன். அடுத்த ஆண்டில், எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சேர்ந்து நடித்த ஒரே படமான ‘கூண்டுக்கிளி’யைத் தயாரித்தனர்.

படம் வெற்றிபெறவில்லை. எனினும் குலேபகாவலி, பாசம், பெரிய இடத்துப்பெண், பணம் படைத்தவன், பறக்கும்பாவை என எம்.ஜி.ஆரை வைத்துத் தொடர்ச்சியாகப் பல படங்களைத் தயாரித்தார். டி.ஆர். ராஜகுமாரி கடைசியாக நடித்த படம், ‘வானம்பாடி’ சென்னை தியாகராய நகரில் அவர் பெயரிலேயே ராஜகுமாரி என்ற திரையரங்கத்தையும் கட்டினார்.

ரசிகர்கள் பலரின் கனவுக்கன்னியாக இருந்த டி.ஆர். ராஜகுமாரி தனக்கான வாழ்க்கை நாயகனைத் தேர்ந்தெடுக்கவேயில்லை. தனிமையிலேயே வாழ்ந்த அவர் 1999 ஆம் ஆண்டு தனது 77வது வயதில் காலமானார். அவருடைய கடைசிக்காலங்களில் யாரையும் சந்திக்கவில்லை. அவரது புகைப்படமும் வெளிவராமல் பார்த்துக்கொண்டார். இறக்கிவைக்க முடியாத சோகத்துடன் முடிந்து போனது அந்த கனவுக் கன்னியின் வாழ்வு.

0 comments:

Post a Comment