Sunday 2 March 2014

புழுக்கள் நெளியும் ஆட்டுக் கறி… குடலைப் புரட்டும் மாட்டுக் கறி..! – சென்னை பகீர்..?



அடிக்கடி ஹோட்டலுக்குப் போய் சிக்கன், மட்டன் என்று அசைவ உணவுகளை விரும்பிச் சுவைப்பவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்!

கடந்த வாரம், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு ஒரு போன் செய்தவர், ‘வெளி மாநிலத்தில் இருந்து பெட்டி பெட்டியாக ஆடு, மாடு இறைச்சிகளை, சென்னைக்குக் கொண்டு வர்றாங்க’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து இருக்கிறார்.

இந்த விஷயம் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவே, உடனடியாக சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 5,000 கிலோ மாட்டு இறைச்சியும் சுமார் 3,500 கிலோ ஆட்டு இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர், ”எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்தான் நாங்கள் சோதனைக்குக் கிளம்பினோம்.

 நாங்கள் சோதனை நடத்த ரயில்வே அதிகாரிகள் முதலில் அனுமதிக்கவே இல்லை. அதன்பிறகு, ரயில்வே துறை உயர்அதிகாரிகளிடம் பேசித்தான் அனுமதி வாங்கினோம்.

ஆந்திராவில் இருந்து வந்த நிறைய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பெட்டி யைப் பிரித்ததுமே துர்நாற்றம் குடலைப் பிடுங்கியது. அவ்வளவும் மாட்டுக்கறி.

இன்னொரு பெட்டியில் இருந்த கறியைத் திறந்தபோது, ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. இவை எல்லாம் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

அங்கே இருந்து சென்னை வந்து சேர கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகும் என்றால், அந்த மாட்டை எத்தனை நாட்களுக்கு முன் வெட்டி இருப்பார்கள்? அந்த இறைச்சியை சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்குதான் சப்ளை செய்திருக்கிறார்கள். எங்கள் சோதனை யைப் பார்த்ததும், இறைச்சியை டெலிவரி எடுக்க வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

கண்டிப்பாக இதை ஒரு தனிநபர் செய்திருக்க முடியாது. இதற்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருக்க வேண்டும். சென்னைக்கு வந்து இறங்கிய அத்தனை இறைச்சி பார்சல்களும் தகுதிச்சான்றிதழ் பெறாதவை.

உணவுப் பொருட்களை அனுப்பும் பட்சத்தில், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்வே சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதிச் சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும். சான்றிதழ் இல்லாத பட்சத்தில், அங்கு இருக்கும் ரயில்வே அதிகாரிகளே அவற்றைப் பறிமுதல் செய்து இருக்க வேண்டும். ஆனால் ஏனோ அவர்கள் செய்யவில்லை.

அங்கு பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை, கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்தில் குழிதோண்டி, பிளீச்சிங் பவுடர் போட்டு, பினாயில் ஊற்றிப் புதைத்தோம். சென்னைக்கு வந்த இறைச்சிப் பெட்டிகள் மீது, ‘உஸ்மான், சென்னை’ என்று மட்டும்தான் எழுதப்பட்டு இருக் கிறது. யார் அந்த உஸ்மான் என்றும் தேடி வருகிறோம்.

ஒரு நாளைக்கு சுமார் 8,000 கிலோ இறைச்சி கொண்டு வருகிறார்கள் என்றால், அது ரோட்டோரக் கடைகளுக்கு மட்டும் போயிருக்க சாத்தியம் இல்லை. நாங்கள் விசாரித்த வரையில் சென்னையில் உள்ள சில ஸ்டார் ஹோட்டல்களுக்கும் இந்த இறைச்சி சப்ளை செய்யப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரம், இந்த விவகாரத்தில் ஈடுபட்ட அத்தனை பேரையுமே பிடித்து விடுவோம்” என்று உறுதியுடன் சொன்னார்.

சிந்தாதரிப்பேட்டையில் இறைச்சிக் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் பேசினோம். ”எங்க கிட்ட ஆட்டுக் கறி வாங்கினா, ஒரு கிலோ 430 ரூபாய். வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரும் கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை 120 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதைப் பெரும்பாலும் ஹோட் டல்காரங்கத்தான் வாங்கிட்டுப் போவாங்க.

அந்த மாதிரி இறைச்சியை எங்காவது ஒரு குடோன்ல வெச்சுப் பிரிச்சு, நேரடியா சம்பந்தப்பட்டவங ்களுக்கு சப்ளை பண்ணிடுவாங்க” என்றார். தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீநிவாசனிடம் பேசினோம். ”நானும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன்.

ரோட்டோரத்தில் கடை நடத்துபவர்களும், டாஸ்மாக் கடைகளுக்குப் பக்கத்தில் கடை வைத்து இருப்பவங்களும்தான் இது மாதிரியான கறியைப் பயன்படுத்த முடியும். பெரிய ஹோட்டல்களில் எல்லாம் ஃப்ரெஷ்ஷாக வெட்டப்படும் இறைச் சியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம்” என்றார்.

சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி யிடம் கேட்டபோது, ”சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனியும் இப்படி நடக்காமல் தடுக்கப்படும்” என்றார். வெளியே சாப்பிடும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கத்தான் வேண்டும்..

0 comments:

Post a Comment