Sunday 9 March 2014

வைரங்களைப் புதைத்திருக்கும் வரிகளை கொண்ட உவமைகள் நிறைந்த பாடல்...!



மீண்டும் நாயகன் பாடும் சரணம். முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ முழுநெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடிகொண்ட சிலையல்லவோ

இப்போது கவிஞர் விஸ்வரூபம் எடுக்கிறார். இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் மிகவும் சாதாரணம் என்பது போல நாயகி திருமணத்தை வெறுத்தவள். அவள் காதல் வயப்படும் போது,

அந்த மாற்றம் படிப்படியாகத்தான் நிகழ வேண்டும். முதலில் தன்னைப் பற்றிக் கூறிவிட்டுத் தான் நாயகனுக்கு ஏற்றவள்தான் என்ற கருத்தை முன் வைக்கிறாள். இப்போது நாயகன் அவளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு விட்டான் என்று தெரிந்ததும், அவனோடு தான் இணைய விரும்புவதைத் தெரிவிக்கிறாள். முதலில் உவமைகளில் துவங்குகிறான்.

அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிலலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே

உவமைகளை அடுக்கிக் கொண்டே போவதில் கவிஞருக்கு எந்த ஒரு சிரமமும் இரப்பதாகத் தெரியவில்லை.

எவ்வளவு நேரம்தான் மறைமுகமாகப் பேசிக் கொண்டிருப்பது? இதற்கு மேல் தயங்கக் கூடாது என்று முடிவு செய்து அடுத்த வரியில் தன் விருப்பத்தை நேரடியாகவே சொல்லி விடுகிறாள்.

துணையோடு சேராத இனம் இல்லையே!

இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் பொருள்களைப்பற்றி உயிர் இனங்களும் அப்படித்தான் என்று வலியுறுத்துவது போல, ‘துணையோடு சேருவது எல்லா உயரினங்களுக்கும் இயல்பான ஒன்றதான் எனவே என் மனதைப் புரிந்து கொள்’ என்ற செய்தியைச் சொல்லி முடிக்கிறாள். இப்போதுதான் நாயகிக்குத்தான் செய்த தவறு உரைக்கிறது. ‘நான் சொன்ன உவமைகள் எல்லாம் சரிதானா? ஏதோ ஒன்று உதைக்கிற மாதிரி இருக்கிறதே! ஆமாம் நான் முதலில் சொன்ன மூன்று உவமைகளுக்கும், கடைசியாகச் சொன்ன உவமைக்கும் ஒரு அடிப்படையான வேறுபாடு இருக்கிறதே! அலையும் கடலும் ஒன்றுதான் உடலோடு பிறந்ததுதான் நிழல்

இமையும் விழியும் எப்பொழுதுமே இணைந்துதான் இருந்து வந்திருக்கின்றன.
ஆனால், உயிர் இனங்களில், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனித்தனியே பிறந்து வளர்ந்து, பின்னே இணைகிறார்கள். இது எப்படி மற்ற உவமைகளுடன் பொருந்தும்?
இந்த முரண்பாட்டைச் சரிக்கட்டுவதற்காக நாயகி, புத்திசாலித்தனமாக அவசரமாக அடுத்த வரியை அமைக்கிறாள். ‘என் மேனி உனதன்றி எனதில்லையே’ அதாவது எப்படி அலை கடலுக்குச் சொந்தமோ,

நிழல் எப்படி உடலுக்குச் சொந்தமோ, இமை எப்படிக் கண்களுக்குச் சொந்தமோ, அது போல் நான் உனக்குச் சொந்தம் எனவே கடைசியாக நான் சொன்னது ஒரு சம்பிரதாயமான உவமைதான். முதலில் சொன்ன மூன்று உவமைகள்தான் எனக்கும் உனக்கும் பொருந்தும்.

இந்த விளக்கத்தை அவள் அவசரமாக வெளிப்படுத்துவது இசையிலும் பிரதிபலிக்கிறது. ‘துணையோடு சேராத இனம் இல்லையே’ என்ற வரியைத் தொடர்ந்து, ஒரு சிறு கால இடைவெளி கூட இல்லாமல், ‘என் மேனி உனதன்றி எனதில்லையே’ என்று வருவது சிறப்பு எனினும், முதல் சரணத்திலும் இவ்வாறே வருவதால், இது தற்செயலாக அமைந்தது என்றுதான் கருத வேண்டும். ஒரு தெய்வீக இசை அமைப்பில், இது போன்ற தற்செயலான ஆச்சரியங்கள் அமைவதில் வியப்பில்லை.

நாயகியின் இந்த வரிசைகளைக் கேட்டதும், நாயகனுக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது. காதலியுடன் இணைவதை நினைத்து, நாயகன் பாடத் துவங்கி விடுகிறான்.

இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

இவை பழைய (கிராம போன்) இசைத் தட்டுக்களில் இடம்பெற்ற வரிகள் சென்சாரின் வலியுறுத்தலாலோ என்னவோ, திரையில், இந்தச் சரணம் முழுவதுமாக மாற்றப்பட்டது. வாலியின் கற்பனை, உச்சியில் பறந்த வேளையில் நமக்குக் கிடைத்தது ஒரு கூடுதலான சரணம்.

எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர் மேனித்தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

பாடல் ஒரு சிறிய ஹம்மிங்குடன் முடிகிறது. இந்த ஹம்மிங் சற்று அழுத்தமாக அமைந்திருப்பதைக் கவனிக்கலாம். நாயகியின் தயக்கமான துவக்கம் முழுமையான ஆனந்தத்தில்முடிவதை ஹம்மிங் மாறுபாடு உணர்த்துகிறது. நாயகியின் சுய அறிமுகம், தன் விருப்பத்தை மெலிதாக வெளிப்படுத்துதல் நாயகனுடன் இணைதல் என்று மூன்று நிலைகளில் சரணங்களை அமைத்திருப்பது வாலியின் சிறப்பு.

பெரும்பாலும், நாயகனுக்கு ஒரு விதமான பல்லவி, நாயகிக்கு சற்றே வேறுபாடான பல்லவி (அனுபல்லவி?) என்று அமைக்கும்மெல்லிசை மன்னார், இந்தப் பாடலில் நாயகன் நாயகி இருவருக்கும்ஒரே விதமான பல்லவியை அமைத்து (வரிகள் வேறுபட்ட போதிலும்) இருவருக்கும் வெவ்வேறு விதமான சரணங்களை அமைத்திருப்பது புதுமை.


இந்தப் பாடலைக் கேட்கும் போது இது காற்றினிலே வரும் கீதம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு இனிமையான தென்றல் நம்மைத் தீண்டி விட்டுப் போவது போன்ற உணர்வு!மெல்லிசை மன்னரின் மாணிக்கக் கற்கள் பதித்த வாலியின் வைர வரிகளைக் கொண்டது இந்தப் பாடல்.

0 comments:

Post a Comment