Sunday 16 March 2014

நம்ம கவுண்டரின் கலகலப்பான பேட்டி - உங்களுக்காக...!



பேட்டி’ என்றாலே விலகிச்செல்லும் அல்லது விரட்டிவிடும் நம்ம கவுண்டரேதான். ”ஒரு ஃப்ரெண்டா வா… ரசிகனா வா… எவ்வளவு நேரம் வேணும்னாலும் எது வேணும்னாலும் பேசலாம். ஆனா, பத்திரிகைக்காரனா வராத!” என்று அன்பாக அதட்டும் அதே கவுண்டமணி. ‘இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது’ முதல் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ வரை சாகாவரம் பெற்ற பன்ச்களின் நாயகன் இதோ என் முன் அமர்ந்திருக்கிறார்.

பல மாதத் துரத்தல், வற்புறுத்தல், ஏகப்பட்ட உரையாடல்களுக்குப் பிறகு நிகழ்ந்த பேட்டி இது. அரியலூர் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தின் ’49ஓ’ படத்தின் படப்பிடிப்பு இடைவேளைகளில் கவுண்டமணியிடம் பேசியது அப்படியே இங்கே…

”தம்பி… பேட்டினு உக்காந்துட்டேன். ஆனா, நீ பாட்டுக்குக் கேள்வி கேட்டுட்டே இருந்தா எனக்குப் பிடிக்காது. நானா மனசுல தோணுறதைச் சொல்றேன். நீ குறிச்சுக்க. அதுல குறுக்குக் கேள்விலாம் கேட்டா, நான் எனி செகண்டு எந்திரிச்சுப் போயிடுவேன் ஓ.கே-வா!” – அவரின் அதே அக்மார்க் அதட்டல்!

”ரொம்ப வருஷம் கழிச்சு நடிக்கிறீங்க. இந்தக் கதையை எப்படி…” (கேள்வியை முடிக்கவிடாமல்)

”பார்த்தியா… பத்திரிகைகாரன் வேலையைக் காட்டுற. ரொம்ப வருஷம் கழிச்சுலாம் இல்லைப்பா. ரெண்டு, மூணு வருஷம் இருக்கும். அவ்ளோதான்! இது ஒரு சின்ன கேப். இதுக்கே, ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு’னு நீட்டி முழக்கி பில்ட்-அப் குடுத்துருவீங்களே! ஏதோ 14 வருஷம் ராமர் வனவாசம் போன மாதிரி ஃபீல் பண்ணாதீங்க.

2010-ல ‘ஜக்குபாய்’, ‘பொள்ளாச்சி மாப்ள’னு நான் நடிச்ச படங்கள் ரிலீஸ் ஆச்சு. இப்போ ’49ஓ’ல நடிக்கிறேன். ஒரு நடிகன்னு இருந்தா நடுவுல திடீர்னு கொஞ்சம் கேப் விடுவான். பிறகு, சரசரனு நடிப்பான். அவ்வளவுதான். இதை ஏதோ உலக கின்னஸ் சாதனை கணக்கா விளக்கம் கேட்டுக்கிட்டு இருக்கிறதா?

அப்புறம் இந்தப் படத்துல நடிக்கணும்னு ஏன் முடிவெடுத்தேன்னு கேக்க வந்தீங்கள்ல! இந்தப் பட டைரக்டர் தம்பி ஆரோக்கியதாஸ் விடாமத் துரத்தித் துரத்திக் கதை சொன்னார். ‘உங்களை மனசுல வெச்சுதான் எழுதினேன்’னு சொல்லி ஒவ்வொரு சீனையும் விளக்கினார். பன்ச், காமெடி, டயலாக் டெலிவரினு யோசிச்சா, எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. அதுவும்போக படத்தோட சப்ஜெக்ட் விவசாயம். இப்பவும் நமக்குள்ள ஒரு விவசாயி ஒளிஞ்சிட்டு இருக்கான். அதான் உடனே நடிக்கச் சம்மதிச்சுட்டேன்!”

”ரீ-என்ட்ரில காமெடி ஸ்கோப் உள்ள படம் நடிப்பீங்கனு நினைச்சா, விவசாயம்னு எதிர்பார்க்காத கோல் அடிக்கிறீங்களே?”

”நல்லா இருந்துச்சேனு போன தீபாவளிக்கு பண்ண அதிரசத்தை இன்னைக்குத் திங்க முடியுமா? அப்போ பண்ணது நல்லா இருந்தா, அதை ரசிச்சுக்கலாம். அதே மாதிரி திரும்ப நடிக்கணும்னு என்ன கட்டாயம்?

’49ஓ’ படத்துல விவசாயம்தான் கதை. கதிர் அறுக்கலாம்னு நினைச்சா, மழை பெஞ்சி கெடுத்திருக்கும். நடவு நடலாம்னு நினைச்சா, வெயில் காய்ஞ்சு கெடுத்திருக்கும். வட்டிக்கு மேல வட்டி வாங்கிப் போட்ட காசை கடைசிவரைக்கும் எடுக்க முடியாமப்போனாலும், அவன் விவசாயத்தை விட மாட்டேங்கிறான். ஏன்? என்னைக்காவது நல்லது நடக்கும்னு காத்திருக்கான். ஆனா, நல்லது நடக்கிற சூழ்நிலையா இங்கே இருக்கு?” என்று நிறுத்திவிட்டு இளநீர் ஒன்றை வாங்கி அண்ணாந்து குடிக்கிறார்.

சட்டென்று பாதியில் நிறுத்திவிட்டு, ”ஏய்ய்… இரப்பா! நான் சொன்னதை வெச்சு அரசாங்கத்தைக் குத்தம் சொல்ற படம்னு வம்பு கொளுத்திப்போட்டுராதீங்க. இயற்கை விவசாயத் துக்கு ஆதரவா நிறைய விஷயம் பேசும் படம். மத்தபடி அரசையோ, அரசியல்வாதியையோ குத்தம் சொல்றது கதையோட நோக்கம் கிடையாது. இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்குப் படத்துல மரியாதை பண்ணியிருக்கோம்!”

”நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ’49ஓ’-னு தலைப்பு வெச்சு, ‘யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை’னு சொல்றீங்களா?”

”பார்த்தியா… மறுபடி மறுபடி பத்திரிகைக்காரன் வேலையைக் காட்டுற! இதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கணும்? இந்தக் கேள்வியில இருந்து தப்பிக்கணுமேனு இதைச் சொல்லலை. விவசாயம் பாதிக்கப்படுறது மட்டும்தான் படத்தோட மையம். அதுல நிறைய காமெடியும் கொஞ்சம் சென்ட்டிமென்ட்டும் சேர்த்திருக்கோம். அவ்வளவுதான். கொஞ்சம் வெயிட் பண்ணு… நான் ஒரு ஷாட் நடிச்சுட்டு வர்றேன்” என்று எழுந்து செல்கிறார்.

தான் தேர்தலில் நிற்கவைக்கும் சுயேட்சை வேட்பாளருக்காக சங்கு சின்னத்தில் கவுண்டமணி ஆதரவு திரட்டுவது போன்ற காட்சி. அப்போது குவியும் பத்திரிகையாளர்களிடம் சரமாரியாகப் பேட்டி அளிக்கிறார் கவுண்டர். அந்தக் காட்சி நான்கைந்து டேக்குகள் கடக்க, வேடிக்கை பார்க்கும் கூட்டத்தைப் பார்த்து, ”பார்த்தீங்களா… இப்படித்தான் ஒரே சீனை நாள் பூரா எடுத்துட்டு இருப்போம். இப்பவே பார்த்துப் போரடிச்சுட்டா, அப்புறம் படம் பார்க்க வர மாட்டீங்க. கிளம்புங்க… கிளம்புங்க” என்று கவுண்டமணி செல்லமாக அதட்ட, ‘அட… சினிமால இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று ‘கவுன்டர்’ கொடுக்கிறது கூட்டம்.

”ஏ ஆத்தி… எமகாதப் பயலுகளா இருக்கானுங்கப்பு!” என்று சிரித்துக்கொள்கிறார் கவுண்டமணி.

”நீங்க ஹீரோ மாதிரி படம் முழுக்க வருவீங்களா?”

”மாதிரி என்ன மாதிரி… ஹீரோவே நான்தான்! ஆனா, தொடர்ந்து இப்படியே நடிப்பேன்னு சொல்ல முடியாது. இந்தப் படத்தோட கதைக்கு நான் ஹீரோ. அவ்வளவுதான்!”

”ஒருத்தருக்குப் பட்டப் பேர் வெச்சுக் கலாய்ச்சு காமெடி பண்ணி, கிண்டல் அடிக்கிற உங்க ஸ்டைலைத்தான் இப்போ எல்லாருமே காப்பி அடிக்கிறாங்க!”

”பண்ணிட்டுப் போகட்டுமே! ‘நான் மட்டும்தான் மத்தவங்களைக் கிண்டல் அடிப்பேன்’னு உரிமை வாங்கி வெச்சிருக்கேனா என்ன? எல்லாரும் எல்லாரையும் கலாய்க்கட்டும்!”

” ‘ஜூனியர் கவுண்டர்’னு பேர் வாங்கிட்டார் சந்தானம். ‘கவுண்டரைச் சந்திப்பது உண்டு’னு அவர் பேட்டிகள்ல சொல்லிட்டு வர்றார்!”

”உண்டுனு சொன்னார்னா உண்டுனு போட்டுக்கங்க. அவர் என்ன பொய்யா சொல்லப்போறார்?”

”வடிவேலு, சந்தானத்தைச் சந்திச்சா என்ன பேசிப்பீங்க?”

”எல்லா நடிகர்களுமே நமக்கு ஃப்ரெண்டுதான். அதனால அப்பப்ப எப்பயாச்சும் போன்ல பேசிப்போம். அதுல விசேஷமா சொல்ல என்ன இருக்கு?”

”எண்பதுகளில் மணிவண்ணன், சத்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன்னு ஒரு டீம்ல வேலை பார்த்ததுக்கும், இப்போ இளைய தலைமுறை இயக்குநர்களோட வேலை பார்க்கிறதுக்கும் என்ன வித்தியாசம்?”

”எல்லாமே சினிமாதானே. எல்லா படத்தையும் தியேட்டர்லதானே போடுறாங்க. அப்புறம் என்ன வித்தியாசம் இருந்துடப்போகுது. நான் எப்பவும் வசனங்களை ஸ்பாட்லகூட இம்ப்ரூவ் பண்ணுவேன். பேப்பர்ல இருக்கிறதைவிட சமயங்கள்ல ஸ்பாட்ல பளிச்னு ஏதாவது தோணும். அதைச் சேர்த்துக்குவோம். அந்தச் சுதந்திரம் இப்பவும் இருக்கு!”

”சமீபத்துல பார்த்ததுல என்ன படம்லாம் பிடிச்சது?”

”உண்மையைச் சொல்றேனே… தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம்னு எந்த இந்திய மொழிப் படங்களையும் பார்க்கிறதே இல்லை. படம் பார்க்கணும்னு நினைச்சா ஹாலிவுட் படங்கள்தான் பார்ப்பேன்!”

”தமிழ் படங்களைக்கூட பார்க்காம இருக்க என்ன காரணம்?”

”நான் ஏன் பார்க்கணும்னு நீங்க காரணம் சொல்லுங்க. நான் ஏன் பார்க்கிறதில்லைனு அப்புறம் பதில் சொல்றேன்!”

”நீங்க நடிச்ச படங்களைக்கூட பார்க்க மாட்டீங்களா?”

”பார்க்க மாட்டேன்! நாம பேட்டி கொடுத்தாலும் கொடுக்காட்டியும் நம்ம படங்கள் டி.வி-ல ஓடுது. காமெடி சேனல்லயும் அதுதான் ஓடுது. அதைத் தாண்டி நான் பேட்டில என்னத்தைச் சொல்லிடப்போறேன். ஒரு நடிகர் சும்மா இருக்கார்னா சும்மா இருக்கார்னு எழுதிடுவீங்க. நடிக்கிறார்னா நடிக்கிறார்னு எழுதிடுவீங்க. இப்படி நீங்களே எல்லாத்தையும் எழுதின பிறகு, தனியா நான் எதுக்குப் பேசணும்? இப்பவே ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன். போதும்!”

0 comments:

Post a Comment