Sunday 16 March 2014

எவர்கிரீன் உலகநாயகனின் 'குணா' - திரை விமர்சனம்



ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன், எப்போதும் அபிராமி அந்தாதியை பாடிக்கொண்டே இருக்கிறான். காரணம் கேட்டால் 'அபிராமி' என்று வானத்தை நோக்கி கை காட்டுகிறான். தன்னை காக்கவும், தன்னோடு வாழவும் அபிராமி வருவாள் என்று நம்புகிறான்.

அதே போல ஒரு பெண்ணை கோவிலில் சந்திக்கிறான். அவள் தான் 'அபிராமி' என்று நினைத்து, சந்தர்ப்பவசத்தால் அந்த பெண்ணை கடத்திக் கொண்டு போய் ஒரு மலை உச்சியில் தங்க வைக்கிறான். அந்தப்பெண் இவனை வெறுத்தாலும், பின்னர் இவன் தன் மேல் வைத்திருக்கும் ஒரு பக்தி கலந்த காதலை புரிந்து இவளும் இவனை காதலிக்கிறாள். இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தார்களா? என்ன தான் ஆனது கடைசியில்? என்பதே இந்த படம்.

படத்தின் ஆரம்ப காட்சியில் கமலின் அறிமுகமே வித்தியாசமாக இருக்கும். ஒரு பெரிய பாறையின் மீது ஒற்றைக் காலில் நின்று கொண்டிருப்பார். ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் என்றாலும், 'அவனும் ஒரு மனிதன் தான்' என்று மிக அழகாக சொல்லியிருப்பார் கமல். 'உன் மொகரகட்டைக்கு எங்கள விட்டா யாருடா வருவா?' என்று அவரின் தாய் கோபத்துடன் கேட்டு கமலை அடிக்க, அந்த ஆத்திரத்தில் ஆட்டுக்கல்லை எடுத்து தன் அம்மா மீது போடப் பார்த்து, பிறகு அதை அப்படியே தன் நெஞ்சில் வைத்து இடித்துக்கொண்டு அழும் காட்சி செம.

 தன் கண் முன்னே காதலி இறந்ததை பார்த்து, அதை நம்பாமல் 'இல்ல, இல்ல. இது பொய்' என்று உரக்க சொல்லுமிடத்தில் 'Iam the one & only' என்று திரும்பவும் நிருபித்திருக்கிறார் கமல் என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் கதாநாயகியாக புதுமுகம் ரோஷினி. இவரை கமல் பார்த்தவுடன் 'பார்த்த விழி, பார்த்தபடி பூத்து இருக்க' என்ற பாடலுக்கு மெய் மறந்தபடி ஒரு மூமென்ட் கொடுப்பார். அந்த மூமென்ட், இந்த பெண்ணின் அழகால் அது நம்மையும் தொற்றிக்கொள்ளும். அவ்வளவு அழகு. இவருக்கு இதுவே முதல் படம்.

அதற்குப் பிறகு ஹிந்தியில் மூன்று படங்கள் நடித்து விட்டு காணாமல் போய் விட்டார். இவர் மட்டும் தொடர்ந்து நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வந்திருப்பார். இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது கமலுக்கு மட்டுமே தெரியும் என்றே நினைக்கிறேன். இந்த படத்தில் கமல் மட்டுமே பிரதானமானதால், இவர் வரும் காட்சிகளில் கொஞ்சம் சுமாராகவே நடித்திருக்கிறார். இவருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பது நடிகை சரிதா.

கமல், ரோஷினி தவிர்த்து இந்த படத்தில் நடித்திருக்கும் பழம் பெரும் நடிகை எஸ்.வரலக்ஷ்மி, 'காகா ராதா கிருஷ்ணன், ஜனகராஜ், எஸ்.பி.பால சுப்பிரமணியம், கிரீஸ் கர்னாட், ரேகா, அஜய் ரத்னம் போன்ற அனைவரும் தங்களது கதாபத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்கள். படத்தை தயாரித்தது அலமேலு சுப்பிரமணியம். படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஜான் எடதட்டில். ஒளிப்பதிவு - வேணு, படத்தொகுப்பு - பி.லெனின் & வி.டி. விஜயன், படத்தை இயக்கியது சந்தான பாரதி. படம் வெளியான ஆண்டு 1992.

இந்த படத்தில் இசை ஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அருமை. அப்பனென்றும், உன்னை நானறிவேன், கண்மணி அன்போடு, பார்த்த விழி என்று எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் தான். படம் வெற்றி பெறாததற்கு காரணம் என்னவென்று நான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்.

'மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதர் காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது' என்ற வசனம் இன்றைய தேதி வரை பிரபலம். இது தான் இந்த படத்தின் மூலக் கருவும் கூட. இந்தப் படம் வெளிவந்த போது கூடவே வெளியான படம் தான் சூப்பர் ஸ்டாரின் 'தளபதி'. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையரங்கில் இந்த இரு படங்களின் கட் அவுட் தொடர்பான பிரச்சனையில் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை அபிராமி திரையரங்கில் ஹீரோவுக்கான தனி கட் அவுட் வைக்க தியேட்டர் நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை.

0 comments:

Post a Comment