Sunday 23 March 2014

ஆம் ஆத்மியில் சேருவாரா ஜெயம் ரவி...



நிமிர்ந்து நில்’ படத்திற்கு வெளியான கலவையான விமர்சனங்களைத் தாண்டி உற்சாகமாகவே இருக்கிறார் ஜெயம்ரவி. ‘பூலோகம்’, ஜெயம் ராஜா இயக்கத்தில் இன்னொரு படம் என்று பிஸியாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.

‘நிமிர்ந்து நில்’ உங்கள் படவரிசையில் எப்படி?

இந்தப்படம் என் கேரியரில் முக்கிய மான படமாக இருக்க போகிறது என்று கதையைக் கேட்டபோதே முடிவு செய்துவிட்டேன். அது இப்போது உண்மையாகி விட்டது. இந்தப் படத்திற்காக எனக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டு இருக்கிறது. அரவிந்த் கேரக்டரின் சமூகக் கோபமும் உணர்வும் அறியாமையும் எனக்கும் இருந்தது. அதனால்தான் இந்தப்படத்தில் நான் நடிக்க முடிந்தது. சமுத்திரக்கனிக்கும் அது இருந்ததால்தான் இந்தத் திரைக் கதையை அவரால் எழுத முடிந்தது. உங்ககிட்ட இந்த மாதிரி படங்களைத் தான் எதிர்பார்க்கிறோம்னு என்னோட ரசிகர்கள் சொல்றாங்க.

என்னதான் சீரியஸ் கதையைக் கருவைக் கொண்ட படமாக இருந்தாலும் அதை பொழுதுபோக்கு என்ற பார்முலாவுக்குள் அடக்குகிறீர்களே?

நீங்கள் டாக்குமென்டரியை காட்டினால் ரசிகர்கள் தியேட்டருக்கே வரமாட்டார்கள். படம் பார்த்த பத்திரிகையாளர்கள் ஏன் இரண்டாவது பாதியில் ஆட்டம் பாட்டம், காமெடி என்று மாற்றி விட்டீர்கள் என்று கேட்கிறார்கள். அது அவர்கள் பார்வை.

ஆனால் படத்தின் இரண்டாவது பாதியை தியேட்டரில் போய் பாருங்கள். ரசிகர்கள் விசி லடித்து ரசிக்கிறார்கள். சமூகத்துக்கு செய்தி சொல்லும் படங்களை நீங்கள் பொழுதுபோக்குப் படமாகக் காட்டும் போது அதற்கு அதிக பலன் கிடைக்கும்.

பாலா மாதிரி ஒரு இயக்குநரின் படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லையா?

அது என் கையில் இல்லை. நான் ஏற்று நடிக்க ஏதுவான கதாபாத்திரம் என்று பாலா கருதினால் என்னை கண்டிப்பாக அவர் தெரிவு செய்வார் என்று நம்புகிறேன். ‘நிமிர்ந்து நில்’ படம் பார்த்து விட்டு பாராட்டியவர்களில் பாலாவும் ஒருவர். “படத்தோட க்ளைமாக்ஸ்ல கண்ணாலயே நன்றி சொல்றியே... ரொம்ப ரியலா இருந்துச்சு” என்று அவர் சொன்னது எனக்கு பெரிய பாராட்டு. என்னை இத்தனை கவனித்தவர், ‘என் இயக்கத்தில் நடி’ என்று சொல்ல எத்தனை நேரமாகும்.

உங்கள் கதாபாத்திரத்துக்கு படத்தில் அரவிந்த் என்று பெயர் வைத்திருக் கிறீர்கள்? இது அரவிந்த்கெஜ்ரிவாலின் பாதிப்பில் உருவான கதாபாத்திரமா?

கண்டிப்பாக இல்லை. அரவிந்த் என்பவர் சமுத்திரக்கனியின் காலேஜ் மேட். நிஜவாழ்க்கையிலும் அநீதியைக் கண்டு கொதிக்கும் குணம் கொண்டவர். இங்கே எல்லாமே தப்பா இருக்கு சிலவற்றை மாற்றுவதற்காக இங்கே போராடியிருக்கிறார். ஒருகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பால் அமெரிக்காவில் குடியேறி வாழ ஆரம்பித்துவிட்டார்.


‘அமெரிக்காவில் மட்டும் தவறுகள் நடக்கவில்லையா’ என்று சமுத்திரக்கனி அவரிடம் கேட்டதற்கு, ‘இந்தியாவுடன் ஒப்பிடும்போது இங்கே குறைவுதான்’ என்று கூறியிருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்தே அரவிந்த் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் நியாயத்துக்காக போராடுகிறவர், ஆனால் எந்த வழியில் போராடுவது என்று தெரியாமல் தவிப்பவர். ஷங்கர் சாரின் முதல்வன் படக் கதாபாத்திரத்தின் பிரதிபலிப்புபோல அவரைப் பார்ப்பதை நானும் ரசித்தேன்.

அப்படியானால் ஆம் ஆத்மியில் சேரும் எண்ணம் இருக்கிறதா?

அரசியல் பற்றி என்னைப் போன்ற நடிகர்கள் பேசினால் எல்லாருக்கும் பளிச்சென்று படுகிறது. இவனுக்கு ஏன் இந்த வேலை என்று கேட்கிறார்கள். நான் ஒருமுறை கூட ஓட்டுப்போடாமல் இருந்ததில்லை. என்னளவில் அதுவே போதும் என்று நினைக்கிறேன். கட்சி அரசியல் எனக்கு ஒத்து வராது.

நீங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரம் போலவே, உங்களது நிஜவாழ்க்கையில் கோபம் கொண்டதுண்டா?

சினிமாவில் நுழைவதற்கு முன்புவரை நான் இப்படித்தான் இருந்து வந்திருக்கிறேன். யாருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது. நாமும் யாரிடமும் சலுகை பெறவும் கூடாது என்று சொல்லித்தான் அப்பா வளர்த்திருக்கிறார். எனக்கு பணம், புகழ் இரண்டுமே சினிமாவில் சீக்கிரமே கிடைத்துவிட்டது. ஆனால் அதை எதை யுமே என் மண்டையில் நான் ஏற்றிக் கொள்ளாதற்குக் காரணம் அப்பாவின் நேர்மைதான். கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை டிராஃபிக் போலீஸாரிடம் நானும் நண்பர்களும் மாட்டிக்கொண்டோம். எல்லோரும் அவர்களது அப்பாக்களின் பெயர் களைச் சொல்லிவிட்டு கிளம்பிவிட் டார்கள். என்னிடம் நீ யார் பையன் என்று கேட்டார்கள்.


நானோ எனது அப்பா பெயரைச் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. அப்படிச் சொன்னாலும் பயனில்லை. நான் தவறு செய்திருப்பதால் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லிவிடுவார். அதனால் எனக்கு என்ன அபராதமோ அதைக் கட்டிவிடுகிறேன் என்றேன். என் நேர்மைக்கு அந்த இடத்தில் மரியாதை இருந்தது. ‘உன்னை மாதிரியே எல்லோரும் இருந்திட்டா நல்லா இருக்கும் தம்பி’ என்றார் அந்த அதிகாரி. இதை பெருமைக்காக சொல்லவில்லை. நாம் எல்லோருமே தப்பித்துக் கொள்ள நினைப்பதால், நாமெல்லாம் சேர்ந்தே இப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்கி வைத்திருக் கிறோம்.. 

0 comments:

Post a Comment