Saturday 15 March 2014

ஸ்டைல் மட்டுமல்ல… நடிப்பும் கூடப் பிறந்ததுதான்..! - நெகிழ வைத்த ரஜினி



கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு தலைவரின் ஆறிலிருந்து 60 வரை படம் பார்த்தேன், இன்று (நவம்பர் 23, திங்கள்). எத்தனையாவது முறை..?
தெரியவில்லை…

அவருடைய படங்களைப் பார்க்க மட்டும்தான் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியும். எத்தனை முறை என்பதை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை.

ஸ்டைல் இல்லை, நிமிடத்துக்கொரு முறை முடிகோதும் அந்த மேனரிஸம் இல்லை, காற்றில் பறந்து பந்தாடும் சண்டைகள் இல்லை, அறிமுகப் பாடலோ, பஞ்ச் வசனமோ இல்லை… ஆனால் ‘தலைவர்’ வருகிற ஒவ்வொரு காட்சியிலும் மனசு அதிர்ந்து அழுதது.

வாழ்க்கை இத்தனை வலி மிகுந்ததா..! இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் தெரியாத ஒரு உலகத்துக்குப் போய்வந்த உணர்வு.

தன் சொந்த தம்பியிடம் பணம் கேட்கக் கூச்சப்பட்டு ரஜினி தயங்கி நிற்கும் ஒரு காட்சியில் அவரது தன்மானத்துக்கும் வறுமைக்கும் நடக்கிற போராட்டம்…

“அண்ணா… ஒரு 5000 ரூபா பணத்துக்காக உன் வாழ்க்கையை அடகு வச்சிக்கிறது சரிதான்னு எனக்குப் படல…” என்று தம்பி பேசும்போது, தலைவர் ஒரு ஞானி மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்வார்..

“கண்ணா.. மாடு மனை மண்ணு பொன்னு இதெல்லாம் அதுவா அமையறதுப்பா… அதைத் தீர்மானிக்கிறது நாம இல்லை”

தோல்வி மேல் தோல்வி, அடி மேல் அடி விழும்போது, அப்படியே இறுகி இறுகி தன்னையே மறுவார்ப்பு செய்து கொள்ளும் காட்சிகளில்…

“தான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்க என்னைச் சுத்தி இருக்காங்க… நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்க வெளியே இருக்காங்க” என உறவுகளுக்கான அர்த்தம் சொல்லும்போதும்…

-நண்பர்களே, இந்தப் படம் வெளியான வருடம் 1979!

ரஜினி அந்தக் காட்சிகளிலெல்லாம் நடித்த மாதிரியே தெரியவில்லை.

பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்ட ஆத்திரம் மேலிட முதலிரவில் கோபித்துக் கொண்டுபோய், சில நிமிடங்களில் மனச் சமாதானமடைந்து திரும்பி வந்து மனைவியுடன் அவர் இயல்பாகப் பேசும் காட்சி, ஏனோ மனதில் ஆணியறைந்தது மாதிரி பதிந்துவிட்டது.

படத்தில் ஒரே கமர்ஷியல் விஷயம் கண்மணியே பாட்டு. பெரிய டெக்னிக்கல் உத்தி எதுவும் இல்லாத சாதாரண காட்சியமைப்புதான்.

ஆனால் கேட்கும்போதெல்லாம் நினைவுகளை ஈரப்படுத்தி கண்களைக் கசிய வைக்கிற ஒரு பாடலாகத் தந்துவிட்டார் இசைஞானி. அதுவும் பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கிற அந்த இசை (அது ஒரு அற்புதமான பாஷை மாதிரியே படும் எப்போது கேட்டாலும்!), ‘எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா… பல்சுவையும் சொல்லுதம்மா…’ என்ற வரிகளுக்கு தலைவர் நடித்திருக்கும் அழகு, அந்த இணையில்லாத, முகம் கொள்ளாத மந்தகாச சிரிப்பு… இணையில்லாத பாடல் அது!

தலைவரின் இந்த 60வது பிறந்த நாளுக்கு இந்தப் பாடலையே அவருக்கு டெடிகேட் செய்ய விரும்புகிறேன். இந்தப் பாடலுக்கு ஏதாவது ஸ்டில் அனுப்பணும் என்று நினைத்த போது, அந்தப் பாடலையே ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டால் என்னவென்று தோன்றியது. அதையும் பயன்படுத்துங்கள்.

இறுதியாய் ஒரு வார்த்தை… திரைத்துறை தாண்டி பொதுவாழ்க்கையில் ரஜினி உறுதியாக ஒரு முடிவை எடுக்கவில்லை என்பது போல சிலர் விமர்சனங்கள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி தீர்க்கமான மனிதர். தன் கருத்தில் எப்போதும் மாறாத உறுதியுடன் இருக்கும் அசாதாராண நபர். தேடி வந்த முதல்வர் பதவியை வேண்டாம் என்று சொல்ல எத்தனை தன்னம்பிக்கையும், மன உறுதியும் வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

இப்படிப்பட்ட ஒருவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்ற விவாதமே இனி வேண்டாம். அவர் விருப்பம் அது. ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, ஒரு குருவாக இருக்க அவரைத் தவிர சிறந்த ஒருவர் தமிழகத்தில் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

ஒரு ரஜினி ரசிகனாக சில நேரங்களில் சிலரது ஏளனத்துக்கு ஆளாகிருக்கிறேன். ஆனால் வருத்தப்பட்டதில்லை. ‘போகட்டும் கண்ணனுக்கே’ என சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன்.
அன்று சொன்னதுதான் இன்றும்… ரஜினி ரசிகன் என்பதில் பெருமையாக இருக்கிறது!

0 comments:

Post a Comment